Site icon Metro People

சங்கராபுரம் பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

சங்கராபுரம் பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று மாலை கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பட்டாசுக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டாசுக் கடை விபத்தில் காலித், ஷா ஆலம், சையத் அலி, ஷேக் பஷீர், அய்யாசாமி உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அய்யாசாமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார்.

பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்த அனைவரும் அவர்களது குடும்பங்களின் வருவாய் ஈட்டும் உறுப்பினர்கள் ஆவர். அதனால், அவர்களை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அந்தக் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், காயமடைந்த அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தி, இத்தகைய விபத்துகள் நடப்பதை அரசு தடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version