Site icon Metro People

முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே பட்டாசு கடைகளின் விபத்துகளுக்கு காரணம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பட்டாசு கடைகளில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே விபத்துகளுக்கு காரணம் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சாலை அகரத்தில் நித்யா என்பவர் உரிமம்பெற்று அமைத்திருந்த பட்டாசு கடையில், வெடிபொருள் துணைகட்டுப்பாட்டாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததாகக் கூறி, அந்த கடைக்கு கடந்த 28-ம் தேதி சீல் வைத்தனர்.

இதை எதிர்த்து நித்யா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக நேற்று நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ‘‘மனுதாரர் அனைத்து உரிமங்களையும் முறையாகப் பெற்று பட்டாசுகடை நடத்தியுள்ளார். கடையின் முதல் மற்றும் 2-வது தளங்களில் விதிமீறல் இருப்பதாகக்கூறி, அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக சிலதினங்களே பட்டாசு விற்பனை நடைபெறும் நேரத்தில் கடைக்கு சீல் வைத்துள்ளனர்’’ என்றார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, “மனுதாரர் பட்டாசு கடைகளில் மேற்கொள்ள வேண்டிய அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை. அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இரு தளங்களில் வெடிபொருட்களை இருப்பு வைத்துள்ளார். பட்டாசு கடைகளில் வெடி பொருட்களை முறையாக கையாளாமல் அலட்சியமாக இருந்ததுதான் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வெடிவிபத்து போன்ற சம்பவங்களுக்குக் காரணம்” என்றார்.

அதையடுத்து நீதிபதி ஆர்.மகாதேவன், ‘‘ தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், மனுதாரர் உடனடியாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளும்உரிய ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்த பின்னர், மனுதாரருக்கு பட்டாசு கடை நடத்த அனுமதியளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை நவ.9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Exit mobile version