Site icon Metro People

‘அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையை விட்டு நீக்க முயற்சி’ : ஓபிஎஸ் குற்றச்சாட்டு

கம்பம் நகர திமுக செயலாளர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களிடம் பேசிய ஓர் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையை விட்டு நீக்கும் முயற்சி நடந்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு பக்கம் அம்மா உணவகங்களை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் திமுகவினர் மறுபக்கம் அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையிலிருந்து நீக்கும் முயற்சியையும் செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் பணியாற்றுவோரை பணிநீக்கம் செய்வதாக மாநகராட்சியினர் தெரிவித்தபோது அதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்கள் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு அறநெறியில் போராடியவர்களை காவல் துறையில் புகார் அளித்து கைது செய்வோம் என மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்தன. திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அம்மா உணவகங்களிலும் இதே நிலைமை தான் நீடிப்பதாக செய்திகள் வருகின்றன.

சில இடங்களில் நிதித் சுமையை காட்டி பணியாளர்களை விலகச் சொல்கிறார்கள் என்ற தகவலும் வருகிறது. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதும் தற்போது அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கம்பம் நகர திமுக செயலாளர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களிடம் பேசிய ஓர் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் திமுக நகரச் செயலாளர் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண்களிடம் நீங்கள் தான் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டீர்களே, புதிதாக மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என்றும் தன்னுடைய சொந்த ஓட்டலில் வேலை ஏற்படுத்தித் தருவாதகவும், கட்சிப் பணி புரிந்தவர்களுக்கு வேலை தர வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும், கட்சிக்காக வேலை பார்த்தவர்கள் பத்து ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்ததால் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு அந்தப் பெண்கள் நாங்கள் ஏழு ஆண்டுகளாக இங்கு தான் பணிபுரிந்து வருகிறோம் என்றும், இதை நம்பித்தான் தங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது என்றும், இதை நம்பித்தான் தங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது என்றும் தங்களில் பெரும்பாலானோர் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் திமுகவின் நகரச் செயலாளரோ அவர்களை பணியிலிருந்து எடுப்பதில் உறுதியாக உள்ளதாக அந்த ஆடியோ செய்தியிலிருந்து தெரிய வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற செயலில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. திமுகவினரின் இதுபோன்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது.

அம்மா உணவகங்களில் கணவனால் கைவிடப்பட்டவர்கள் விதவைகள் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தான் பணியாற்றுகின்றனர். கரோனா நோய்த் தொற்று உச்சத்தில் இருக்கும்போது அனைத்து உணவகங்களும் முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில், தங்களது உயிரை துச்சமென மதித்து, நேரம், காலம் பார்க்காமல் அல்லும் பகலும் அயராது உழைத்து ஏழை, எளிய மக்களின் பசியை ஆற்றும் மகத்தான பணியைச் செய்தவர்கள். அவர்களை அந்தப் பணியிலிருந்து எடுத்துவிட்டு அங்கு திமுகவிற்கு பணியாற்றியவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது நியாயமற்ற செயல். இயற்கை நியதிக்கு முரணானது.

அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, களத்தில் என்ன நடக்கிறது என்பதை விசாரித்து அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளிய தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version