தமிழகத்தில் மொத்தமுள்ள 1.92 லட்சம் படுக்கைகளில் 9 ஆயிரம் படுக்கைகளே நிரம்பியுள்ளதாகவும், தொற்று பாதித்த 94 சதவீதம் பேர் வீட்டுத் தனிமையிலேயே உள்ளனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 9, 237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் இருப்பதாக குறிப்பிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொங்கல் விடுமுறைக்கு பலர் சொந்த ஊர் சென்றதால் கிராமங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் என்றும் வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கை-மாற்று அறுவை சிகிச்சை கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்டா, ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையிலும் பிற நோய்களுக்கான சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்படுகிறது என்றும், இன்று காலை கோஷா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வராததால் கண்காணிப்பாளர், ஆர்எம்ஓ இருவக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் 4 கோடியே 80 லட்சம் மதிப்பில் கைமாற்று அறுவை சிகிச்சை கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம், 20 படுக்கைகள், 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புற்றுநோய் கதிர்வீச்சுக்கான சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 1.21 லட்சம் குக்கிரமாங்களில் 24 ஆயிரத்துக்கும் மேலான கிராமங்களில் தொற்று பாதிப்பு உள்ளது என்றும், நகரங்களில் 1.27 லட்சம் தெருக்களில் 28 ஆயிரத்துக்கும் மேலான தெருக்களில் தொற்று இருப்பதாக கூறிய அமைச்சர் சென்னையில் 9, 237 தெருக்களில் தொற்று பரவல் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 3,787 இடங்கள் கொரோனா காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளாக இருப்பதாக தெரிவித்தார்.
அதேபோல் தமிழகத்தில் மொத்தமுள்ள 1.92 லட்சம் படுக்கைகளில் 9 ஆயிரம் படுக்கைகளே நிரம்பியுள்ளதாகவும், தொற்று பாதித்த 94 சதவீதம் பேர் வீட்டுத் தனிமையிலேயே உள்ளனர் என்றார். பொங்கல் விடுமுறைக்கு பலர் சொந்த ஊர் சென்றதால் கிராமங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் என்ற அவர், வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பேசினார்.
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து 104 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் மசோதா தொடர்பாக அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களை ஆலோசிப்பதாக கூறியது நல்ல மாற்றம் என்று கூறிய அவர், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தை போல தனது ஒடிசா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறியிருக்கிறார். எனவே அமித்ஷா கேட்கும் போது, மத்திய அமைச்சர்களும் நல்ல பதிலை தருவார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்