தன்னுடைய விவாகரத்து குறித்து நடிகை சமந்தா மனம் திறந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாக சைதன்யா – சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே பல்வேறு திரையுலக பிரபலங்கள் பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக சமந்தா பெரியளவில் எந்த ஊடகத்திலும் பேசவில்லை. இது தொடர்பான கேள்விகளையும் தவிர்த்தே வந்தார். இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமந்தா அளித்த பேட்டியில் சமந்தா இது தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் என்னுடைய வாழ்க்கையை வாழவேண்டும். தற்போது என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நான் எதிர்கொண்ட பிரச்சினைகளால் நான் எவ்வளவு வலிமையானவள் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன். நான் ஒரு பலவீனமான பெண் என்றே நினைத்திருந்தேன். நான் வலிமையானவள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. என்னுடைய விவகாரத்தினால் ஏற்பட்ட வலியால் நான் இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். இவ்வளவு வலிமையாக என்னால் இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.