Site icon Metro People

பணம் புகழை பார்த்துவிட்டேன்… அதில் சந்தோஷம் நிம்மதி இல்லை – நடிகர் ரஜினிகாந்த்

பணம்,புகழ்,பெரிய பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான்.  ஆனால் அதில் சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை  என்றும்  வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி நிரந்தரம் கிடையாது என சென்னையில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் ஓம் குருவே சரணம் என்று பேச்சை தொடங்கிய  நடிகர் ரஜினிகாந்த். ‘என்னையும் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள் இது பாராட்டா திட்டா என எனக்கு தெரியவில்லை. நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா.

இந்த இரு படங்கள் வெளியான பிறகு தான் மக்கள் பலருக்கும் ராகவேந்திரா மற்றும் பாபா பற்றி தெரியவந்தது. பாபா படத்திற்கு பிறகு நிறைய பேர் இமய மலைக்கு சென்றதாக சொன்னார்கள்.

என்னுடைய ரசிகர்கள் இந்த இயக்கத்தில் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் இன்னும் நான் நடிகராக இங்கே இருக்கிறேன்.

இமயமலையில் சில மூலிகைகள் கிடைக்கும் அதை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு தேவையான ஆற்றல், வைட்டமின் கிடைக்கும். இந்த உலகத்தை விட்டு செல்லும் போது சொத்தை சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருந்தால்  பிறருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம். இல்லையென்றால் சந்தோஷமாக மருத்துவமனை செல்லாமலேயே நடமாடி கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விட வேண்டும். நான் கூட இரண்டு முறை மருத்துவமனை போய்ட்டு வந்தவன்.

பகுத்தறிவாளிகளுக்கு பகுத்தறிவாளர்கள் மேலை நாட்டை சேர்ந்தவர்கள். ஆனால், அந்த நாடுகளை சேர்ந்த அறிவியல் அறிஞர்களே பரமஹம்ச யோகானந்தாவின் க்ரியா யோகாவை ஏற்று கொண்டார்கள். பணம், புகழ், பெயர் உச்சி , பெரிய பெரிய அரசியல் வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம் நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை. ஏனென்றால் சந்தோஷம், நிம்மதி நிரந்தரம் கிடையாது’  என்று தெரிவித்தார்.

Exit mobile version