சென்னை: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து, சரக்குகளை கையாள்வதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளன. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளதாக சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.
சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் 2024-25-ம் நிதியாண்டில் செயல்பாடு மற்றும் நிதி செயல்திறன் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகம் நிறுவனத் தலைவர் சுனில் பாலிவால் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் இணைந்து, சரக்குகளை கையாள்வதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து, வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளன. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் கையாளப்பட்டுள்ளன. சென்னை துறைமுகம் 54.96 மில்லியன் மெட்ரிக் டன்களையும், காமராஜர் துறைமுகம் 48.41 மில்லியன் மெட்ரிக் டன்களையும் கையாண்டது. இது ஆண்டுக்கு ஆண்டு 6.7 சதவீதம் ஒருங்கிணைந்த அதிகரிப்பைக் குறிக்கிறது.
கார் ஏற்றுமதியில் முதலிடம்: சென்னை துறைமுகத்தின் செயல்பாடுகள் மூலமான வருவாய் ரூ.1,088.22 கோடி, காமராஜர் துறைமுகத்தின் செயல்பாடுகள் மூலமான வருவாய் ரூ.1,130.60 கோடி என மொத்தம் ரூ.2,218 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கார் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே சென்னை துறைமுகம்தான் முதலிடத்தில் உள்ளது. சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 4-வது உயர்மட்ட வழித்தட திட்டம் (ரூ.3,570 கோடி) செயல்பாட்டில் உள்ளது.
இதில் மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. இதில் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. மேலும் 4 மற்றும் 6 வழிச்சாலையாக எண்ணூர் துறைமுகத்தின் வடக்கு நுழைவாயில் முதல் தச்சூர் வரை வெளிவட்டச் சாலை ரூ.2071 கோடி நிதியில் அமைக்கப்படவுள்ளது. மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.