‘மாநாடு’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும்போது சிம்பு கண்ணீர் விட்டு அழுதார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (நவ.18) ‘மாநாடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிலம்பரசன், எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் சிலம்பரசன் பேசும்போது, உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
அவர் பேசியதாவது:
”என்னுடைய படங்களுக்கு பிரச்சினை வருவது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. சுற்றி நிறைய பிரச்சினை செய்கிறார்கள். ஆனால், அப்படியான சூழலை எல்லாம் கடந்து தாக்குப் பிடித்து நிற்கும் ஒரு தயாரிப்பாளரால் மட்டும்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பது தெரிந்துவிட்டது. அப்போதுதான் நான் சுரேஷ் காமாட்சியிடம் இந்தப் படத்தை நீங்கள் எடுங்கள் என்று சொன்னேன். அதேபோல எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் படத்தைக் கொண்டுவந்துவிட்டார்.
யுவன் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அனைவரும் சொன்னது போல எனக்கென்றால் பயங்கரமாக இசையமைத்துவிடுவார். நான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தாங்கிக் கொள்வார். அவரிடம் உங்கள் ராசி, நட்சத்திரம் அனைத்தையும் கொடுங்கள். அப்படிப்பட்ட பெண்ணைத்தான் நான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்வேன். இந்தப் படத்துக்காக நிறைய ரிஸ்க் எடுத்துச் செய்துள்ளேன்.
நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டுவிட்டேன். நிறைய பிரச்சினைகள் கொடுக்கிறார்கள். பிரச்சினைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்”.
இவ்வாறு சிம்பு பேசினார்.