உங்கள் தேசத்தின் சிறுபான்மையினர் நலனை பேணவும்’ – வங்கதேசத்துக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்தின் காரணமாக மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரம் குறித்த வங்கதேச அரசின் கருத்துகளை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும் அவை பொய்யானவை என்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதில் இருந்து திசைத் திருப்பும் முயற்சி என்றும் கூறியுள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை, “மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

வங்கதேசத்தின் இந்தக் கருத்தினை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது. இது தேவையற்றக் கருத்து என்றும், வங்கதேசம் அவர்கள் நாட்டின் சிறுபான்மையினர் நலனை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறைச் செய்தித்தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “மேற்குவங்க சம்பவம் தொடர்பாக வங்கதேசம் தெரிவித்துள்ள கருத்துகளை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது. அது ஒரு கபட முயற்சியாகும்.

வங்கதேசத்தில், அங்குள்ள சிறுபான்மையினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதற்கு எதிராக இந்தியா தனது கவலையை தெரிவித்து வருகிறது. அதற்கு இணையாக வங்கதேசம் இவ்வாறு ஒரு விஷயத்தை எடுத்து வைக்கிறது. அங்கு வன்முறையாளர்கள் இன்னும் சுதந்திரமாகவே நடமாடி வருகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *