முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவேன் என தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் தளத்தை வாங்குவது உறுதியானது. தற்போது அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். ட்விட்டர் தளத்தை மஸ்க் வாங்குகிறார் என்ற செய்தி வெளியானது முதலே ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து பேசப்பட்டு வந்தது. அதுகுறித்து ட்ரம்ப் கூட தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது விருப்பம் என்ன என்பதை தெரிவித்துள்ளார் மஸ்க்.
கடந்த 2021 வாக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தமைக்கும், ட்விட்டரின் கொள்கையை மீறிய காரணத்திற்காகவும் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.
“நிரந்தர தடையை மோசமான ஒரு முடிவாக நான் பார்க்கிறேன். இது அறவே அறமற்ற மற்றும் முட்டாள்தனமான செயலாகும்” என நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரை வாங்கும் பணி முடிந்தவுடன் ட்ரம்ப்பின் ட்விட்டர் தடையை திரும்ப பெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.