Site icon Metro People

ஊழியர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் சுற்றறிக்கை’ – டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மாவட்ட மேலாளரிடமிருந்து முறையான அனுமதி கடிதம் பெற்ற பிறகுதான், சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை ஊழியர்கள் சந்திக்க வேண்டுமென்ற சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்கம் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “டாஸ்மாக் நிறுவனத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு போதுமான ஊதியம் மற்றும் அடிப்படை உரிமைகள் வழங்கப்படுவதில்லை. எனவே இதுதொடர்பாக சென்னை தலைமை அலுவலத்தில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 29-ம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், எந்தவொரு ஊழியரும், தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரியை சந்திக்க வேண்டுமென்றால், சம்பத்தப்பட்ட மாவட்ட மேலாளரிடமிருந்து முறையான அனுமதி கடிதம் பெற வேண்டும். இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களிடம் இதுகுறித்து தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஊழியர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Exit mobile version