அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கார்கே பேசியதாவது: கடந்த 1924-ம் ஆண்டு கர்நாடகாவின் பெலகாவில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை மகாத்மா காந்தி ஏற்றார். இதை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி மிகப்பெரிய விழாவாக கொண்டாடி வருகிறோம். குஜராத்தை சேர்ந்த தாதாபாய் நெளரோஜி, மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோர் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டனர். அவர்கள் அஹிம்சை என்ற ஆயுதத்தை வழங்கினர். அந்த ஆயுதத்தை யாராலும் வெல்ல முடியாது.
மகாத்மா காந்திக்கும் சர்தார் படேலுக்கும் இடையே பகைமை இருந்ததாக தற்போது அவதூறு கருத்துகள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்கு புறம்பானது. இருவருக்கும் இடையே ஆழமான நட்புறவு நீடித்தது. காங்கிரஸுக்கும் அம்பேத்கருக்கும் இடையே மோதல் போக்கு இருந்ததாகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதுவும் உண்மை கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அம்பேத்கருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது. கடந்த 1949-ம் ஆண்டு உரையில் இந்த உண்மையை அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அம்பேத்கர் வரையறுத்த அரசியலமைப்பு சட்டம் இறுதி செய்யப்பட்டபோது ஆர்எஸ்எஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது அந்த அமைப்பு சார்பில் காந்தி, நேரு, அம்பேத்கரின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டன. தற்போதைய நரேந்திர மோடி அரசும் தேசத் தலைவர்களை அவமதித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் பிரதான இடத்தில் இருந்த தேசத் தலைவர்களின் சிலைகள், ஒதுக்குபுறமாக கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.