இளையராஜா ஒரு வைகை நதி என இயக்குநர் மிஷ்கின் புகழாரம் சூட்டியுள்ளார்.
எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ‘தூங்காநகர நினைவுகள்’ நூல் அறிமுக விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர்கள் பிரபாகர், சுந்தர் காளி, எழுத்தாளர் ஷாஜகான், ஆகியோர் பங்கேற்று நூலினை அறிமுகம் செய்து வைத்தனர். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், ”மதுரையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருநாள் மதுரையில் இரவு 1 மணிக்கு சூடாக பருத்திப்பால் குடித்தேன். என் வாழ்நாளில் அந்த நேரத்தில், அப்படி ஒரு பானத்தை நான் இது வரை குடித்ததே இல்லை
இளையராஜா பத்தி உங்கள் கருத்து என்ன என என்னிடம் கேட்கிறார்கள். அவரே கருத்து சொல்லிவிட்டார். நான் என்ன சொல்ல. அவருடன் சண்டை வேறு. நீண்ட நாள் அவருடன் பேசவும் முடியாது. இசை மட்டும் தான் பண்ண முடியும். நமகெல்லாம் இளையராஜா ஒரு வைகை நதி. இளையராஜா என்ன வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால், அவருக்கான கைதட்டல்களை நாம் மறுக்கக் கூடாது.
நான் மிகவும் ரசிக்கும் மற்றொரு மதுரைக்காரர் வடிவேலு. எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் உடல்மொழியைப் பேசிய நடிகர் அவரைப்போல யாருமில்லை. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் அகராதியில் நகைச்சுவை பிரிவில் அவரைப்போன்ற ஒரு முன்னெடுப்பை யாரும் செய்ததில்லை. அவருக்காக பெரிய கைத்தட்டல்கள்” என்று கூறினார்.