Site icon Metro People

சட்டவிரோத மதுபானம் விற்பனை: சென்னையில் ஒரே இரவில் 41 பேர் கைது

சென்னை: சென்னையில் நேற்று ஒரே இரவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சட்டவிரோத மதுபானங்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, ஆணையர் உத்தரவின்பேரில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுபானக் கூடங்கள் மற்றும் இதர இடங்களில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் சென்னை முழுவதும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சிறப்பு சோதனையில் மதுபானகூடங்கள் மற்றும் இதர இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 581 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.11,490 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version