கொல்கத்தா: வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சிறுபான்மையின மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன். வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள்.
மேற்கு வங்கத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. ஆனால், அதை செய்ய விட மாட்டோம். வக்பு திருத்த சட்டத்தை இங்கு அமல்படுத்த மாட்டோம். இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.