எம்.ஜி.எம். நிறுவனத்திற்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில், விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் ஒருபகுதியாக, விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபானத் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் அமைந்துள்ள இந்த மதுபான தொழிற்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மதுபான பாட்டில்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில் தான் தற்போது எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் இருந்து 4 காரிகளில் வந்துள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று காலை மதுபான தொழிற்சாலைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
அங்கு மதுபான உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்து கொண்டு, அந்த ஊழியர்களை தனி இடத்தில் அமர வைத்துள்ளனர்
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனையால் மதுபான உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.