Site icon Metro People

சர்ச்சைக்குள்ளான காளி போஸ்டரை நீக்க இந்தியா கோரிக்கை – எதற்கும் அஞ்சப் போவதில்லை என லீனா மணிமேகலை திட்டவட்டம்

மதுரையைச் சேர்ந்த கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை, ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். கனடாவில் உள்ள யார்க் பல்கலைக் கழகத்தில் முதுநிலை கவின்கலை படித்துவரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின்கீழ், காளி குறித்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார்.

இது ஆகா கான் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட உள்ள நிலையில், இதுகுறித்த போஸ்டரை லீனா வெளியிட்டுள்ளார். அதில், காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போலவும், கையில் தன்பால் ஈர்ப்பாளர்களின் வானவில் கொடியை ஏந்தியிருப்பது போன்றும் உள்ளது.

அதனை கண்டித்து டிவிட்டரில் “அரெஸ்ட் லீனா மணிமேகலை” என்ற ஹேஷ்டேகில் பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்து, வருகின்றனர். இந்நிலையில், அந்த போஸ்டருக்கு எதிராக காவ் மகாசபா தலைவர் அஜய் கவுதம் டெல்லி காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.

அதில், காளி ஆவணப்படத்தில் கடவுள் காளி புகைபிடிப்பது போல் காட்சியளிப்பது இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ஆவணப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் குறித்து விளக்கமளித்துள்ள லீனா மணிமேகலை, ஒரு மாலைப்பொழுதில் கனடாவின் டொரோண்டோ நகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் காளி ஆவணப்படம் என்றார்.

மேலும், தனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்றும், இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலுடன் இருந்துவிட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கான விலை தனது உயிர்தான் என்றால் அதனையும் தரலாம் என்றும் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து கடவுளை அவமதித்ததாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய போஸ்டர் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் திரைப்பட விழாவிலிருந்து நீக்க வேண்டும் என்று அரசுக்கும், திரைப்பட விழா குழுவினருக்கும் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version