கேரளாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதியர் ராகுல் – கார்திகா. இவர்கள் இருவரும் கடந்த 10-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தங்களின் திருமணத்தில் கட்டாயம் கலந்து கொண்டு தங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று இந்திய ராணுவத்திற்கு அழைப்பு விடுத்து, தங்களின் திருமணப் பத்திரிகையை அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் ஒரு சிறு குறிப்பையும் எழுதி இணைத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்தக் குறிப்பில், “உங்களின் (ராணுவத்தினரின்), உறுதி, நாட்டுப் பற்றுக்கு நன்றி. எங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். உங்களால் நாங்கள் நிம்மதியாக உறங்குகிறோம். விருப்பமானவர்களுடன் அன்பை பரிமாறிக்கொள்கிறோம். உங்களால் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் முக்கியமான அந்த நாளில் நாங்கள் உங்களின் வருகையும் ஆசிர்வாதத்தையும் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவம் அந்த அழைப்பிதழை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “நல்வாழ்த்துக்கள். தங்களின் திருமணத்திற்கு இந்திய ராணுவத்திற்கு அழைப்பு விடுத்தற்கு ராகுல் – கார்த்திகா தம்பதிகளுக்கு இந்திய ராணுவம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள். எப்போதும் இணைந்திருங்கள்” என்று தெரிவித்துள்ளது. இந்தப் பதிவை ஒரே நாளில் இதுவரை 84,995 பேர் விரும்பியுள்ளனர். பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர், இருவரின் சிறந்த செயல் என்று தெரிவித்துள்ளார். இரண்டாவது நபர், இது மிகவும் ஆச்சரியமானது என்று தெரிவித்துள்ளார். நமது உண்மையான கதாநாயகர்களுக்கு நமது அன்பை வெளிப்படுத்தும் சிறந்த செயல் என்று மூன்றாமவர் தெரிவித்துள்ளார். நான்காவது நபர், வாவ் ஆகச் சிறந்த திருமண அழைப்பு இது. நமது நிஜ கதாநாயகர்களுக்கு ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.