Site icon Metro People

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்- கோவையில் பரபரப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் கனகராஜ் தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் முன்பு திரண்ட அவர்கள் மத்திய அரசிற்கு எதிராகவும், அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபடி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.

அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினா். அப்போது  போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்ட சிறிதுநேரத்தில் 40க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில்நிலையத்தின் பின்புற வழியாக ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை நாகர்கோவில் ரயில் முன்பாக மாணவ மாணவியர் மறியலில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீசாரும், கோவை மாநகர காவல் துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய முயன்றனர்.

ஆனால் மாணவர்கள் கைது நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கவே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது காவல் துறையினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

இதனையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். ரயில் நிலைய வளாகத்தில் நடைபாதையில் முழக்கங்கள் எழுப்பியபடி வந்த மாணவர்கள் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் முயற்சியே இந்த திட்டம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

கோவை ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், இந்திய மாணவர் சங்கத்தினரும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்கள் காரணமாக கோவை ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அதேபோல, திருவாரூரிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version