Site icon Metro People

‘இந்திய ஒற்றுமை யாத்திரை பாஜகவை பதற்றப்பட வைத்துள்ளது’ – மல்லிகார்ஜூன கார்கே

புதுடெல்லி: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை பாஜகவை பதற்றப்பட வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன தினம், புதுடெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், மணிசங்கர் ஐயர், அம்பிகா சோனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் என பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”இந்தியா இன்று முன்னேறி இருப்பதற்குக் காங்கிரஸ் கட்சிதான் காரணம். பட்டியல் சமூக மக்கள், ஏழைகள் ஆகியோரை முன்னேற்றுவதில் காங்கிரஸ் கட்சி காட்டிய முனைப்பு காரணமாகவே வளர்ச்சி பரவலாக்கப்பட்டது. இதேபோல், இந்திய ஜனநாயகம் வலிமையாக இருப்பதற்கும் காங்கிரஸ் கட்சிதான் காரணம். பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, காங்கிரஸ் கட்சியைச் சேராத 5 பேரை தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். இதன்மூலம் அனைவருடனும் இணைந்து நாட்டை வலுப்படுத்த வேண்டும் எனும் கொள்கையை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர்.

இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகள் தற்போது தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. நாடு முழுவதும் ஒருவித வெறுப்பு அரசியல் பரவிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாட்டால் பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்திருக்கிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு இது குறித்து கவலைப்படுவதில்லை.

காங்கிரஸ் கட்சியை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும். இளைஞர்கள், பெண்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்டோரை நாம் காங்கிரஸ் கட்சிக்குள் அதிக அளவில் சேர்க்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய அரசியல்தான் காங்கிரசின் அரசியல். இந்த பணியை ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் ஏற்கனவே தொடங்கிவிட்டார். இந்த யாத்திரை, எதிர்தரப்பை பதற்றப்பட வைத்துள்ளது. நாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கிலான இந்த யாத்திரையில் நாட்டு மக்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.” என தெரிவித்தார்.

Exit mobile version