Site icon Metro People

இந்தியர்கள் திறமையானவர்கள்; இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடையும்: ரஷ்ய அதிபர் புதின்

இந்தியர்கள் திறமையானவர்கள் என்றும் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடையும் என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஒற்றுமை தினம் தலைநகர் மாஸ்கோவில் நேற்று(நவ. 4) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளாதிமிர் புதின் பேசியதாவது: இந்தியாவைப் பாருங்கள். அவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஊக்கத்துடன் செயல்படக்கூடியவர்கள். அவர்களால் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. விரைவில் அந்த நாடு வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை படைக்கும். இதில் சந்தேகமே இல்லை. ஏறக்குறைய 150 கோடி மக்களைக் கொண்ட நாடு அது. அவர்கள் தற்போது அந்த நாட்டின் வளர்ச்சிக்கான மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறார்கள்.

காலணி ஆதிக்கத்தில் ஈடுபட்ட நாடுகளின் செல்வச் செழிப்புக்கு, ஆப்ரிக்காவை அவர்கள் கொள்ளையடித்ததுதான் காரணம். இது எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் இதை மறைக்கவில்லை. ஆப்ரிக்கர்களின் துயரத்தில் இருந்தும், வேதனையில் இருந்துமே இந்த நாடுகள் வளம் பெற்றுள்ளன என்பதை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளின் வளம் முழுமைக்கும் ஆப்ரிக்க சுரண்டல் மட்டுமே காரணம் என நான் கூறவில்லை. ஆனால், அது மிக முக்கிய காரணம். கொள்ளை, அடிமை வணிகம் ஆகியவையே ஐரோப்பாவின் செழுமைக்கு முக்கிய காரணம்.

கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையில், ரஷ்யா ஐரோப்பிய கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க ஒரு அங்கம். பல்வேறு தேசிய அரசுகளின் மூலம் ஒன்றுபட்ட உலக சக்தியை ரஷ்யா உருவாக்கியது. அந்த வகையில் ரஷ்ய நாகரிகமும் கலாச்சாரமும் தனித்தன்மை வாய்ந்தவை. இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விளாதிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி உண்மையான தேசபக்தர் என்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்ளையை அமல்படுத்தி வருபவர் என்றும் புகழந்தார். மேலும், உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பு வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version