Site icon Metro People

மதுரை மாநகராட்சி 8-வது மேயராக இந்திராணி பொறுப்பேற்பு: திமுக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணிப்பு

 மதுரை மாநகராட்சி 8-வது மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி பொன்வசந்த் பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில் சென்னையில் இருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனி விமானத்தில் பறந்துவந்து கலந்து கொண்டார். ஆனால், அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர, புறநகர் மாவட்டச் செயலாளர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது, மதுரை மாவட்ட திமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.

மதுரை மாநகராட்சியில் திமுக 67 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெற்றது. இந்த முறை மாநகராட்சி மேயர் பதவி மதுரையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேயர் வேட்பாளராகுவதற்கு அக்கட்சியை சேர்ந்த முக்கிய கவுன்சிலர்கள் தங்களுக்கு தெரிந்த அமைச்சர்கள், கட்சி மேலிடத் தலைவர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பெரும் முயற்சி செய்தனர். இந்தப் போட்டியில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிபாரிசு செய்த 57-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி பொன்வசந்த் திமுக வேட்பாளரானார்.

அதிமுக வெறும் 15 கவுன்சிலர்களை மட்டுமே பெற்றிருந்ததால் அவர்கள் இன்று காலை 9.30 மணிக்கு கடந்த மறைமுக மேயர் தேர்தலில் பங்கேற்கவில்லை. திமுக மேயர் வேட்பாளர் இந்திராணி பொன்வசந்த் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி மதுரை மாநகராட்சியின் 8-வது மேயரானார். இதற்கு முன் திமுகவை சேர்ந்த தேன்மொழி மதுரை மாநகராட்சி மேயராக இருந்துள்ளார். அதற்கு பிறகு தற்போது 2-வது பெண் மேயராக திமுகவை சேர்ந்தவரே பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் மற்ற மாநகராட்சிகளில் மறைமுக மேயர் தேர்தல் நடந்து முடிந்த உடனே அதில் வெற்றி பெற்றவர்கள் மேயராக பதவியேற்றனர். ஆனால், 9.30 மணிக்கு போட்டியின்றி மதுரை மேயராக தேர்வான இந்திராணி பொன்வசந்த் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இருந்ததால் அவர் விழாவுக்கு வரும் வரை இந்திராணி பொன்வசந்த் மநகராட்சியில் 2 மணி நேரமாக காத்திருந்தார். நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த விழாவில் பங்கேற்பதற்காகவே தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வந்தார். அவர் வந்தபிறகு 11.30 மணியளவில் இந்திராணி பொன்வசந்த் மேயராக அதற்கான அங்கியில் வந்து பதவியேற்றார். மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய மேயராக பொறுப்பேற்ற இந்திராணி பொன் வசந்த்திற்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மதிமுக எம்எல்ஏ பூமிநாதன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்தத்திகேயன் ஆகியோர் பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கூட்டணிக்கட்சி எம்எல்ஏ, எம்பி வந்தநிலையில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்கள் தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

மாநகராட்சியின் 100 வார்டுகளில், மாநகர் 2 மாவட்டச்செயலாளர்கள், புறநகர் 2 மாவட்டச் செயலாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வார்டுகள் உள்ளன. அதனால், அவர்கள் பங்கேற்பார்கள் என்றும், மேலும், சொந்த கட்சி கவுன்சிலர் மேயராக பதவியேற்பதால் வேட்பாளர் தேர்வில் அதிருப்தியிருந்தாலும் அமைச்சர் பி.மூர்த்தி, தளபதி, பொன்முத்துராமலிங்கம், மணிமாறன் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தது மதுரை மாவட்ட திமுகவில் ஏற்பட்ட கோஷ்டிபூசலை இந்த மேயர் பதவியேற்பு விழா வெளிச்சம் போட்டு காட்டியது.

மேயர் பதவியேற்பு விழாவில் முழுக்க முழுக்க நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆதரவு நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். மறைமுக தேர்தல் முடிந்தவுடனே, திமுக கவுன்சிலர்கள் பெரும்பாலானவர்களே பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து சென்றனர்.

Exit mobile version