Site icon Metro People

மீனவர்களுக்கு இனி பாதிப்பு இருக்கக்கூடாது என்பதை இலங்கை அரசிடம் உறுதிப்பட தெரிவிக்கவும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களுக்கு இனிமேல் இலங்கை கடற்படையினரால் பாதிப்பு இருக்கக்கூடாது என்பதை மத்திய அரசு இலங்கை அரசிடம் உறுதிப்பட தெரிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“தமிழக மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையின் அராஜகம் மிகவும் கண்டிக்கத்தக்கது. நேற்று முன் தினம் நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்த இலங்கை மீனவர்கள், 21 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்த போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 21 தமிழக மீனவர்களை கைது செய்து, 2 படகுகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

இதனால் தமிழக மீனவர்களின் குடும்பங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை இனியும் தொடரக்கூடாது.

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 2 படகுகளை மீட்கவும் மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக மீனவர்களுக்கு இனிமேல் இலங்கை கடற்படையினரால் பாதிப்புகள் இருக்கக்கூடாது என்பதை மத்திய அரசு, இலங்கைக்கு உறுதிப்பட தெரிவிக்க வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version