ராம் கோபால் வர்மா – மனோஜ் பாய் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணிபுரியவுள்ளது.
சமூக வலைதளத்தில் வெளியிடும் கருத்துகளால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகும் இயக்குநர் ராம் கோபால் வர்மா. மேலும், அவருடைய சமீபத்திய படங்கள் அனைத்துமே பெரும் தோல்வியை தழுவி வருகின்றன. இதனிடையே, தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
இந்தியில் ‘சிவா’ ரீமேக் தொடங்கி, ‘ரங்கீலா’, ‘சர்கார்’, ‘பூட்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. மேலும், பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது தனது புதிய படத்தை அறிவித்துள்ளார். அதற்கு ‘போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூட்’ என தலைப்பிட்டு இருக்கிறார். இது முழுக்க போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் ஹாரர் கதையாகும். இதில் மனோஜ் பாஜ்பாய் நாயகனாக நடிக்கவுள்ளார்.
“ஒரு என்கவுன்ட்டர் கொலைக்குப் பிறகு, ஒரு காவல் நிலையம், பேய் நிலையமாக மாறுகிறது. இதனால் அனைத்து காவல் துறையினரும் குண்டர்களின் பேய்களிடமிருந்து தப்பிக்க பயந்து ஓடுகிறார்கள்” என்பதே கதைக்களம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ராம் கோபால் வர்மா – மனோஜ் பாஜ்பாய் கூட்டணியில் பல வெற்றிப் படங்கள் உருவானது பாலிவுட் வரலாறு என்பது நினைவுகூரத்தக்கது.