Site icon Metro People

தாம்பரம் மாநகராட்சிக்கான வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரம்

தாம்பரம், அதன் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது புதிய மாநகராட்சிக்கான எல்லையை வரையறை செய்து, புதிதாக வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் நகராட்சிகள் மற்றும் அருகில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து, தாம்பரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநகராட்சிக்கு தேவையான அனைத்து ஆவணங்களைத் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே எல்லை வரையறை செய்து வரைபடம் தயாரிக்கப்பட்\டது. அந்த வரைபடத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் கிராமங்களின் பெயர்கள் இடம்பெறும் வகையில் வரைபடம் தயாராகி வருகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தாம்பரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மாநகராட்சி எல்லை வரைபடம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் வருவாய்த் துறையில் உள்ள கணக்கின்படி கிராமங்களை வரையறை செய்து புதியதாக வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரைபடம் தயாரித்த பின் நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் அளிக்கப்படும் என்றார்.

Exit mobile version