விவசாயிகள் உரிய காலத்தில் கடனை செலுத்தினால் இனி கால்நடை வளர்ப்பு கடன்களுக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:கேசிசி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது விவசாய கடன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி கால்நடை வளர்ப்பு மற்றும் தொடர்புடைய கடன்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
அதன்படி, நடைமுறை மூலதனக்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே இந்த கடன் வழங்கப்பட வேண்டும். கடன் பெற்ற தேதியில் இருந்து ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தற்போது வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் ₹1.60 லட்சம் வரை தனி நபர் ஜாமீன் அடிப்படையில் பிணையமின்றி கடன் வழங்குவது போல், இதற்கு வழங்கலாம். வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன்தொகை ₹3 லட்சத்திற்கு உட்பட்டு கடன் வழங்கப்படும். பயிர்க்கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் நடைமுறை மூலதன கடன் இரண்டும் சேர்ந்து ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் ஏதும் பெறாமல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன் ₹2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உரிய காலத்திற்குள் நடைமுறை மூலதன கடனை திருப்பி செலுத்தினால் 7% வட்டி ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். சொந்த நிதியை பயன்படுத்தும் கூட்டுறவுச் சங்கம், வங்கிகளுக்கு 2% வட்டி மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் இந்த திட்டத்திற்கு வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தவறாது பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.