பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது களத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்து கொண்டதற்காக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர் திக்வேஷ் ராத்திக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது, அந்த அணியின் பிரியன்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை திக்வேஷ் ராத்தி வீழ்த்தினார். அப்போது இந்த விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்ற திக்வேஷ் ராத்தி தனது கைகளில் எழுதுவது போன்று ‘நோட்புக்’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், பிரியன்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தியதை சர்ச்சைக்குரிய வகையில் கொண்டாடியதற்காக திக்வேஷ் ராத்திக்கு ஐபிஎல் ஆணையம் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு வீரர் 4 முதல் 7 டிமெரிட் புள்ளிகள் வரை பெற்றால் ஒரு போட்டியில் அவர் விளையாட முடியாது என்பது விதிமுறையாகும்.