Site icon Metro People

தமிழக நிதிநிலையைச் செப்பனிட 5 ஆண்டுகள் தேவைப்படும்: ப.சிதம்பரம் கருத்து

தமிழக நிதிநிலையைச் செப்பனிட 5 ஆண்டுகள் தேவைப்படும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை மூலம் தமிழக நிதி நிலைமை எந்த அளவிற்குச் சீர்கெட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. நிதி நிலைமையை 2 மாதங்களில் சீர்ப்படுத்த முடியாது.

ஒவ்வோர் ஆண்டும் உறுதியான நடவடிக்கைகள் மூலமே படிப்படியாக 5 ஆண்டுகளில் செப்பனிட முடியும். அதன் முதல் படியாகத்தான் தமிழக பட்ஜெட் உள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவதாக முதல்வர் கூறியிருந்தார். அதன்படி சில வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர். மேலும் திமுகவின் சமுதாயப் பார்வை இந்த பட்ஜெட்டில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. இதற்காக முதல்வரையும், நிதி அமைச்சரையும் பாராட்டுகிறேன்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அப்போது காரைக்குடி எம்எல்ஏ எஸ்.மாங்குடி, நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Exit mobile version