உடல் எடையை குறைக்க ‘ஸ்கின்னிடாக்’ ஆலோசனை ஆபத்தானது: மருத்​து​வம் நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உடல் எடை குறைப்புக்கு டிக்டாக், இன்ஸ்டாகிராம், ரெட்டிட் மற்றும் யூ ட்யூப் ஆகிய தளங்களில் ‘ஸ்கின்னிடாக்’ என்ற பெயரில் வழங்கப்படும் ஆலோசனைகள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இது உடல் எடையை அதிகளவில் குறைப்பதை ஊக்குவிக்கிறது, உணவு பழக்கவழக்கங்களை கட்டுப்படுத்துகிறது. இது குறித்து நிபுணர்கள் கூறியதாவது:

‘ஸ்கின்னிடாக்’ அறிவுரைகள் சமூக ஊடகங்களில் அதிகம் வலம் வருகின்றன. இது ஆபத்தை விளைவிக்கும். லிவ் ஷிமிட் என்பவர் முறையற்ற உணவு ஆலோசனைகளை பகிர்வதற்காக அவர் டிக்டாக் செயலியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார். ஆனாலும், ‘ஸ்கின்னிடாக்’ அறிவுரை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வலம் வருகிறது.

இது குறித்து மருத்துவ நிபுணர் டாக்டர் ஆசிம் சீமா கூறியதாவது: ‘ஸ்கின்னிடாக் ’ ஆலோசனைகளை பின்பற்றினால் 5 விதமான மருத்துவ பாதிப்புகள் ஏற்படும். பசி என்பது உடலில் இயற்கையாக ஏற்படும் அறிகுறி. ஆனால் பசி என்பது உடல் கொழுப்பை எரிப்பதற்கான அறிகுறி என தவறாக ஸ்கின்னிடாக்-ல் கூறப்படுகிறது.

இது உணவை எரிபொருளாக பார்க்க வைத்து, சாப்பிடுவதில் உள்ள மகிழ்ச்சியை நீக்குகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவு சாப்பிடும்படியும், அடிக்கடி பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு உயிர் வாழும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது. இதெல்லாம் அபாயகரமான நடைமுறைகள்.

பசியை கட்டுப்படுத்த அதிகளவில் தண்ணீர், காபி மற்றும் இதர திரவ பாணங்களை எடுத்துக்கொள்ளும்படி கூறுவதும் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதெல்லாம் முறையற்ற உணவு முறைகள். ஆரோக்கியமான நடைமுறைகள் அல்ல.

ஆரோக்கிய நிபுணர் ஸ்டீபன் புச்வால்ட் கூறுகையில், ‘‘ ஒரு குறிப்பிட்ட உடல் வகையை அடைவது, மன உறுதி சம்பந்தப்பட்டது என ‘ஸ்கின்னிடாக்’ உருவாக்கும் மாயை ஆபத்தானது’’ என்றார். ஊட்டச்சத்து நிபுணர் மரியா கூறுகையில், ‘‘ உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற முடியாதபோது, மக்கள் மன உறுதியை குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், கொழுப்பு சத்து விரைவில் கரைவதை தடுக்கும் வகையில்தான் நமது உடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. நமது உடலுக்கு ஏற்றபடி பணி செய்வதுதான் முக்கியம், அதற்கு எதிராக செய்யக் கூடாது’’ என்றார்.