Site icon Metro People

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவரின் மருத்துவ சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு உத்தரவு

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யபட்டுள்ள முகமது அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விசாரணையின்போது, தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் அசாருதீன் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி அசாருதீனின் தந்தை முகமது யூசுப் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “அசாருதீனை தலை கீழாக தொங்க விட்டு அடித்ததாகவும், அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அசாருதீனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர், எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய புழல் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், அசாருதீனின் தந்தை தாக்கல் செய்த மனுவுக்கு, தேசிய புலனாய்வு முகமை ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Exit mobile version