Site icon Metro People

வடபழனி முருகன் கோயிலில் ஜன. 23-ல் குடமுழுக்கு: அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

வடபழனி முருகன் கோயிலில் ஜன. 23-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

வடபழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று மாலை ஆய்வு செய்தார்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

வடபழனி முருகன் கோயிலுக்கு கடந்த 2007-ம் ஆண்டுகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். எனவே, கடந்த ஆண்டு பிப்ரவரியில் திருப்பணிகள் தொடங்கஉத்தரவிடப்பட்டது. கரோனா, வெள்ளம் போன்ற காரணங்களால் தடைகளுக்கு பிறகு, திருப்பணி முழு வீச்சில் நடைபெற்ற காரணத்தால் ஜன. 23-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. வடபழனி முருகன் கோயிலில் மடப்பள்ளி நவீன வகையில் பழமை மாறாமல் மாற்றப்பட்டுள்ளது. 33 அடியில் தங்க தகடுகளால் நெய்யப்பட உள்ள கொடி மரமும் புதிதாக நிறுவப்பட உள்ளது.

கும்பாபிஷேகத்துடன் பணிகள் நிறைவு என்று இல்லாமல் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு புதிதாக 44 சிறு மண்டபங்களை கோயில் சார்பில் கட்டுவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காலணி பாதுகாப்பு இடம், திருமண ஜோடிகள் உடை மாற்றும் அறை, தங்கும் அறை உள்ளிட்டவை ரூ.13 கோடி செலவில் திருப்பணிக்கு பிறகு கட்டப்பட உள்ளன.

வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அன்றைய சூழலைப் பொறுத்து எத்தனை பக்தர்களை அனுமதிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். நோய் தொற்று காரணமாக அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டாலும் அனைத்து பக்தர்களும் இணையதளம், தொலைக்காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு செய்வோம் என்றார்.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Exit mobile version