சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை தழுவி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இதோடு முதல் முறையாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. இது அனைத்தும் இந்த ஒரே சீசனில் நடந்துள்ளது.
இந்த நிலையில், கொல்கத்தா உடனான தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்ததாவது: நாங்கள் எதிர்பார்த்தபடி அமையாத ஆட்டங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. எங்களுக்கு முன் இருக்கின்ற நிறைய சவால்களை ஏற்று நாங்கள் சமாளிக்க வேண்டும். நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. நாங்கள் பேட் செய்த போது பந்து கொஞ்சம் நின்று வந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் அப்படி இருந்ததை பார்க்க முடிந்தது.
அதிக விக்கெட்டுகளை இழந்தால் ஆட்டத்தில் அழுத்தம் அதிகரிக்கும். அதுவும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் அது இன்னும் கூடும். எங்களுக்கு முறையான பார்ட்னர்ஷிப் அமையவில்லை.
எங்களது அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான பேட்ஸ்மேன்கள். எல்லா பந்தையும் சிக்ஸர் விளாசுபவர்கள் அல்ல. தரமான கிரிக்கெட் ஷாட் ஆடுபவர்கள். பவுண்டரிகள் விளாசுவதில் வல்லவர்கள். பவர்பிளேவின் போது ஆடும் சூழலையும் பார்க்க வேண்டும். வீரர்கள் தங்களது பலத்தை அறிந்து விளையாட வேண்டியது மிகவும் முக்கியம். இங்கிருந்து நாங்கள் முன்னோக்கி செல்ல வேண்டி உள்ளது. எங்களை வேறு எந்த அணியோடும் ஒப்பிட வேண்டாம்.” என தோனி தெரிவித்தார்.