ஜார்க்கண்ட்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து – 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு; 4 பேர் காயம்

புதுடெல்லி: ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்ஹைட் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட போக்னாதி அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த ரயில் தண்டவாளமும், ரயில்களும் மின்சார உற்பத்தி நிறுவனமான என்டிபிசிக்குச் சொந்தமானவை என்பது தெரிய வந்துள்ளது.

பிஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள என்டிபிசி-யின் கஹல்கான் சூப்பர் அனல் மின் நிலையத்தையும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா மின் நிலையத்தையும் இந்த ரயில் பாதை இணைக்கிறது. இவை முக்கியமாக அதன் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் கௌசிக் மித்ரா, “சரக்கு ரயில்கள் மற்றும் தண்டவாளம் இரண்டும் NTPC-க்கு சொந்தமானவை. இதற்கும் இந்திய ரயில்வேக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என தெரிவித்தார்.