காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 72 பேர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், ஆப்கனில் அடுத்து என்ன நடக்கும் என உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
ஆப்கனில் நிலையற்ற சூழல் நிலவுவதால், தலிபான்களின் கடந்தகால கொடூரமான ஆட்சிக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு வரும் எந்த விமானத்திலாவது ஏறி, நாட்டை விட்டுச் செல்லும் மனநிலையில், அச்சத்தோடும் பீதியோடும் உள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக விமானம் மூலம் வெளியேற்றி வருகின்றனர். இதுவரை காபூலில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காபூலில் இருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்துக்கு வெளியே பல்வேறு நாட்டு மக்கள் காத்திருந்தனர். காபூல் விமான நிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
மிக மோசமான தாக்குதலை நடத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினர் திட்டமிட்டுள்ளதால் விமான நிலையத்தில் அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட் உள்ளிட்டப் பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அதையும் மீறி மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல கூடட்மாகக் கூடியிருந்தனர். அப்போது, உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு இருவரும், துப்பாக்கிகளை ஏந்திய சிலரும் மக்கள் கூட்டத்தினரை நோக்கி வந்தனர்.
அப்போது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டியிருந்த இருவரில் ஒருவர் அபே கேட் பகுதியில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் அருகே சென்று வெடிக்கச் செய்தார். மற்றொருவர் போரன் ஹோட்டல் அருகே தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அதன்பின் சிலர் தங்கள் கையில் இருந்த துப்பாக்கிகளால் மக்களை நோக்கி சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 22 பேர் கொல்லப்பட்டிருக்கலாம், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இரு மனித வெடிகுண்டு தாக்குதலில் ஆப்கானிஸ்தான் மக்கள் 60 பேரும், அமெரிக்க ராணுவ வீரர்கள் 12 பேரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 143 பேரில் 12 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரமான தாக்குதலை தலிபான் தீவிரவாத அமைப்பும் கண்டித்துள்ளது. அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லாஹ் முஜாஹித் கூறுகையில், “காபூல் விமான நிலையம் அருகே மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதலைத் தலிபான்கள் நடத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.