Site icon Metro People

கள்ளக்குறிச்சி விவகாரம்: கடலூரில் கலவரத்தை தூண்ட முயன்றதாக கல்லூரி மாணவர் கைது

தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாட்ஸ்-அப் மூலம் கலவரத்தைத் தூண்ட முயன்றதாக கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், சில்வர் பீச் பகுதிகளில் மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். யார், யார் கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதை போலீஸார் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் போலீஸ் தரப்பு பகிர்ந்த தகவல்: இன்று (ஜூலை.19) காலை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில்வர் பீச் பகுதியில் 5 பேர் நின்று கொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். கடலூரிலும் இதுபோன்று செய்து மாணவியின் மரணத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் பேசியது போலீஸாருக்கு தெரியவந்தது.

உடனே போலீஸார் அவர்களை பிடிக்க முயன்றபோது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவர் பிடிபட்டார். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் விஜய் என்றும், அவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் என்றும் தெரியவந்தது. மேலும், போலீஸார் அவரது செல்போனை சோதனை செய்தனர்.

அதில் வாட்ஸ்-அப் குழுக்கள் இருந்தன. அதனை பரிசோதித்தபோது கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்ட முயன்றது தெரியவந்தது. இதனையொடுத்து போலீஸார், மாணவர் விஜயை (20) கைது செய்தனர். போலீஸார் அந்த வாட்ஸ் அப் குழுவில் இருப்பவர்கள் யார், யார், அவர்கள் எங்கெல்லாம் உள்ளனர் என்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரையை சேர்ந்த கார்த்திக், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டது தெரியவந்தது. போலீஸார் 2 பேரையும் பிடித்து சின்னசேலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் டிஎஸ்பி கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். சில்வர் பீச் பகுதிக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version