சென்னை: ‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை இப்போது எடுத்து வெளியிட்டால், திரையரங்குகள் எரிக்கப்படும் என்று ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு ராஜீவ் மேனன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை இன்றைய காலகட்டத்தில் எடுக்க முடியாது. இந்தியாவின் சூழ்நிலை மிகவும் நிலையற்றதாகி விட்டது. மக்கள் மிகவும் வலுவான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். மதம் மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டது. ‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை நீங்கள் எடுத்து, அதை திரையரங்கில் வெளியிட்டால், திரையரங்குகள் எரிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். அந்த படம் வெளியான இந்த 25-30 ஆண்டுகளில், இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டது.
ரஹ்மானுக்கும், மணிரத்னத்துக்கும் இந்தி தெரியாது. அதனால் நான் மொழிபெயர்ப்பாளராக இருப்பேன். அந்த காலகட்டத்தில் ரஹ்மான் குடும்பத்திற்குள் இருந்து, குறிப்பாக அவரது சகோதரிகளின் திருமண விஷயத்தில், பெரும் அழுத்தத்தை அவர் எதிர்கொண்டதை நான் கண்டிருக்கிறேன். அதனை தாங்கிக் கொள்ள இசைதான் அவருக்கு உதவியது” இவ்வாறு ராஜீவ் மேனன் தெரிவித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான படம் ‘பம்பாய்’. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நாடு முழுவதும் நடந்த வன்முறை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் அன்றைய காலகட்டத்தில் பெரும் சர்ச்சைகளை எதிர்கொண்டது.