புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத்துக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதாக 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறையை சுட்டிக் காட்டி, மம்தா பானர்ஜி அரசாங்கத்தை பாஜக விமர்சித்துள்ளது.
வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஏப்.8 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற வக்பு சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு, போலீஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் இதனை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
இந்த நிலையில், நேற்று (ஏப்.11) முர்ஷிதாபாத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. முன்னதாக வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இதனிடையே, போலீஸ் அதிகாரிகள், “வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் பதற்றமாகவே இருந்தது. இருப்பினும் புதிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. வன்முறை நடந்த முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
யாரும் எங்கும் மீண்டும் ஒன்றுகூட அனுமதிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம்.” என்று கூறினர்.
இந்த வன்முறையை சுட்டிக் காட்டி, மம்தா பானர்ஜி அரசாங்கத்தை பாஜக விமர்சித்தது, நிலைமையை நிர்வகிக்க திறமை இல்லையெனில், மத்திய அரசிடம் உதவி பெற வேண்டும் என்று விமர்சித்தது. மேலும், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தனது எக்ஸ் தளத்தில், “இது ஒரு எதிர்ப்பு நடவடிக்கை அல்ல, மாறாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்முறைச் செயல். தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பயத்தை விதைக்கவும் குழப்பத்தை பரப்ப முயலும் ஜிஹாதி (Jihadist forces) சக்திகளால் ஜனநாயகம் மற்றும் நிர்வாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பொது சொத்துக்கள் அழிக்கப்பட்டன, அரசு அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்தனர்.” என்று கூறியுள்ளார்.