சென்னை: “மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில் என்சிஇஆர்டி வெளியிடும் ஆங்கில வழிப் பாட புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்,” என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. பாஜக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த அமைப்பின் செயல்பாடுகளில் இந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில் என்சிஇஆர்டி வெளியிடும் ஆங்கில பாட புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த கால நடைமுறையின்படி, பொதுவாக ஒரு புத்தகம் எந்த மொழியில் வெளியிடப்படுகிறதோ, அந்த மொழியிலேயே பெயர் சூட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அப்படியிருக்கையில் ஆங்கில மொழியில் இருக்கும் பாடப் புத்தகங்களை இந்தியில் பெயரை மாற்றியது இந்தி பேசாத மாநிலங்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழி பாடப் புத்தகங்களின் பெயர்கள் முன்பு ஹனிசக்கிள் மற்றும் ஹனிகோம்ப் என்று இருந்தன. ஆனால் இம்முறை இரண்டு வகுப்புகளுக்கான ஆங்கில புத்தகங்களின் பெயர் ‘பூர்வி” என இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ‘மிருதங்”, ‘சந்தூர்” என பாடப் புத்தகங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கணித பாடப் புத்தகத்திற்கு ஆங்கிலத்தில் Mathematics என்று இருந்த பெயரை கணித் பிரகாஷ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படக் கூடாது என்பது ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்தின்படி வழங்கப்பட்டிருக்கிற உரிமை.
அந்த உரிமையை பறிக்கின்ற வகையில் மத்திய பாஜக அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருவது இந்தியாவின் பன்முக கலாச்சாரத்திற்கும், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரான செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். உடனடியாக இந்த பெயர் மாற்றங்களை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.