ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சஞ்சு சாம்சனும் களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 15, ரியான் பராக் 30 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த துருவ் ஜூரெலும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடினர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் அற்புதமாக விளையாடி 47 பந்துகளில் 75 ரன்கள் (10 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். துருவ் ஜூரெல் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட்டும், விராட் கோலியும் பவுண்டரியும், சிக்ஸர்களுமாக பறக்கவிட்டனர்.
அதிரடியாக விளையாடிய பிலிப் சால்ட் 33 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.
இதைத் தொடர்ந்து விராட் கோலியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல்லும் பந்துகளை விளாசி ரன்களைக் குவித்தார். இறுதியில் 17.3 ஓவர்களில் பெங்களூரு அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
விராட் கோலி 45 பந்தில் 62 ரன்களும் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்), தேவ்தத் படிக்கல் 28 பந்தில் 40 ரன்களும் (5 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக பிலிப் சால்ட் தேர்வு செய்யப்பட்டார்.