Site icon Metro People

கே.டி.ராஜேந்திரபாலாஜி ஓரிரு நாளில் கைதாவார்: விருதுநகர் காவல் துறை வட்டாரம் தகவல்

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் நவ.15-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடியானது. இதையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் 8 தனிப் படைகள் அமைத்து அவரைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் மனுகடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துத்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த மனுவை விசாரணைக்கு விரைவில் எடுக்ககோரி மீண்டும் ஒரு மனு கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் டிச.18-ம் தேதி முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பற்றி இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காமல் தனிப்படை போலீஸார் திணறி வருகின்றனர்.

இதனிடையே விருதுநகர் காவல் துறை வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: ராஜேந்திரபாலாஜியின் மொபைல் போன் சிக்னலை தனிப் படை போலீஸார் கடந்த 2 நாட்களாக தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இதன்மூலம் அவர் வெளிமாநிலத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தனிப் படை போலீஸார் குறிப்பிட்ட பகுதியில் முகாமிட்டு அவரது நடவடிக்கைகளை நுணுக்கமாகக் கண்காணிக்கின்றனர். ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தன.

Exit mobile version