நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தியின் திரையுலக பயணத்தில் கடந்தாண்டு சிறப்பாக அமைந்தது. ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘சர்தார்’ என அவர் நடித்த 3 படங்களுமே ஹிட்டடித்தன. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது இயக்குநர் ராஜுமுருகனுடன் இணைந்து ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக வலம் வரும் சுனில், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர இயக்குநர் விஜய் மில்டன் இப்படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் 26-வது படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். நாலு பாட்டு, நாலு பைஃட் என்ற ஃபார்முலாவில், ஆக்ஷன் மசாலாவாக இந்தப் படம் உருவாகிறது. ‘மசாலா படங்களுக்கு ட்ரிபியூட்’ என்ற அறிவிப்போடு இந்தப் படம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பூஜை சென்னையில் கடந்த மார்ச் 27-ம் தேதி எளிமையாக நடந்தது. படக்குழுவினர் மட்டும் இதில் கலந்துகொண்டனர்.