இந்திய ஆட்சி அதிகாரம் டில்லி சுல்தான்கள், நாயக்கர்கள், முகலாயர்கள் என கைமாறிக் கொண்டே இருந்தது. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1700களில்) ஆற்காடு நவாப் ஆட்சியில், தனக்கு போரில் உதவியதற்காக, அப்போதைய நவாப் முகமது அலி, 1763-ல் கிழக்கிந்திய கம்பெனியிடம் இன்றைய தமிழகப் பகுதியில் வரி வசூல் செய்யும் உரிமையை வழங்கினார். அதைத் தொடர்ந்து, அந்தந்தக் காலகட்டத்தில் இந்தப் பகுதியை ஆண்ட அரசர்களுக்கு வரி செலுத்தப்பட்டது.
மகசூலில் மேரை மற்றும் மானியம் போக, மீதி பங்கு, ‘குடிவாரம்’ என்ற பெயரில் நிலத்தை விளைவித்த குத்தகைதாரருக்கும், ‘மேல்வாரம்’ என்ற பெயரில் நில உரிமையாளருக்கும் வழங்கப்பட்டது. வரி வசூல் செய்வதற்காக, மானிய நிலம் என்று சொல்லப்படும், ஜாகிர் நிலத்தின் அமைப்பை அறிய, தாமஸ் பார்னார்ட் என்ற பொறியாளரை கிழக்கிந்திய கம்பெனி பணித்தது.
அன்றைக்கு நடைமுறையில் இருந்த இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், வழக்கமாக இலக்கியங்கள், சமய விஷயங்களை ஓலையில் எழுதும்போது, அந்த ஓலைகள் 40 செ.மீ.க்கு 20 செ.மீ. என்ற அளவில் சீரான துண்டுகளாக நறுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், ஊர் கணக்கு ஓலைகள் நறுக்கப்படாமலும், பதப்படுத்தப்படாமலும், 1 மீட்டர் நீளமும், 34 செ.மீ. அகலமும் கொண்ட நீண்ட சுருள்களாக இருக்கும். இவற்றின் கொத்துகளை ‘சுருணை ஏடுகள்’ என்பார்கள்.
ஒவ்வொரு சுருணை ஏட்டிலும் ஏறத்தாழ 600 ஓலைகள் கொண்ட 20 ஏடுகள் இருந்தன. இந்த ஏடுகளில், 1767 முதல் 1774 வரையிலான காலகட்டத்தில் 1,500 கிராமங்கள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவற்றில் 1,000 கிராமங்கள் பற்றிய தகவல்கள் முழுமையாக உள்ளன.
இந்த ஏடுகளில், மாகாணம், சீமை, கிராமத்தின் பெயர்கள், ஆவணம் எழுதப்பட்ட தேதி, கடைசியாக எழுதியவர் பெயர், ஏட்டு பக்க எண் என, அனைத்து தகவல்களும் சீராக உள்ளன. இவை அனைத்தும், இன்றைய பதிவுத் துறை அதிகாரிகள் போல பயிற்சி பெற்றவர்களால் எழுதப்பட்டது என்று அனுமானிக்கலாம்.
அன்றைய ஒன்றுபட்ட மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் பாளையக்காரர்கள் இருந்தார்கள். குறிப்பாக கட்டபொம்மன் குலத்தைச் சார்ந்தவர்கள், நாயுடுகள், முக்குலத்தோர், சில இடங்களில் யாதவர்கள் பலர் பாளையக்காரர்களாக ஆட்சி நிர்வாகத்தில் இருந்தனர். சில இடங்களில் ஜமீன்தார்களாகவும் இருந்தனர்.
விவசாயிகளிடம் இருந்து ‘கிஸ்தி’ என்ற தீர்வையை வசூலித்து ஆங்கில ஆட்சியாளர்களிடம் கட்ட வேண்டும் என்ற நியதி இருந்தது. குறிப்பிட்ட காலங்களில் ஜமாபந்தி நடக்கும். அன்றைய தினம் கிராமங்களின் கணக்கு விவகாரங்கள் முடிக்கப்படும். தாலுகா அலுவலகத்தில் இரண்டு நாள் நடக்கும் இந்த ஜமாபந்தியில் கிராம மக்களின் குறைகள் என்ன… அவற்றை நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டியவை குறித்து விவாதித்து தாசில்தார் முடிவெடுப்பார்.
அரசு அலுவலகங்களில் ‘பங்கா’ விசிறி
வரி வசூல் செய்யும் அதிகாரம் உள்ளிட்ட சில அதிகாரங்கள் ஆற்காடு நவாப் மற்றும் பாளையக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன. நில வருவாய் சீர்திருத்தங்களை எவ்வாறு மேற்கொள்வது? கிஸ்தியை நிர்ணயிப்பது எப்படி? எவ்வாறு அதை வசூலிக்க வேண்டும்? நில அளவை எப்படி நடத்தப்பட வேண்டும்? என்பது குறித்து கிராம அதிகாரிகளுக்கும், ஊர் கணக்குப்பிள்ளைகளுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் பெரும்பாலும் மின் விசிறிகள் கிடையாது. இதனால் ‘பங்கா’ என்று கூறப்படும் விசிறி அன்று புழக்கத்தில் இருந்து. இதற்காக அறையின் மேலே வளையங்கள் இருக்கும். அவற்றில் படுக்கை வசத்தில் நீண்ட கம்பு வைத்து, அதன் கீழ் தடிப்பான ஜமுக்காளம் போன்ற நீண்ட துணி கட்டப்பட்டிருக்கும். அதனுடன் ஒரு கயிறை இணைத்திருப்பார்கள். கயிற்றைப் பிடித்து அங்கும் இங்கும் ஆட்டும்போது காற்று வரும். இதை ஒரு ஸ்டூலில் அமர்ந்து கொண்டு ஒருவர் இயக்குவார். அவருக்கு ‘பங்கா புல்லர்’ என்று பெயர்.
ஆங்கிலேயர் காலத்து அலுவலகங்களுக்கு அதிகாரிகள் வரும்போது இதுபோன்ற ‘பங்கா’ கட்டப்பட்டு இயக்கப்படும். அதேபோல் அந்தக்கால நீதிமன்றங்களில் மாஜிஸ்திரேட்கள், நீதிபதிகள் அமர்ந்திருக்கும் மேடையின் மேலும் ‘பங்கா’ கட்டப்பட்டிருக்கும். இன்றைக்கும் சில பழமைவாய்ந்த நீதிமன்ற அறைகளில் அந்த வளையங்களைக் காணலாம்.
அன்றைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், நாங்குநேரி, ராதாபுரம் என்ற தாலுகாக்கள் மட்டுமே இருந்தன. இந்த தாலுகாக்களின் கீழ் பிர்க்காக்கள் இருந்தன. பிர்காக்கங்களின் அதிகாரியாக வருவாய் ஆய்வாளர் இருப்பார். அவர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிர்க்காக்களின் கீழ் உள்ள கிராமங்களில், கிராம அதிகாரிகளின் நிர்வாகத்தைக் கண்காணிப்பார். இந்த கிராம அதிகாரிகளுக்கு மிகவும் குறைவான ஊதியமே கொடுக்கப்பட்டது. சிலர் இதை ஒரு கவுரவப் பதவியாகக் கருதி, அந்த ஊதியத்தை வாங்குவதில்லை. என் தந்தையாரும்கூட ஊதியம் வாங்கியது இல்லை.
இந்த தாலுகாக்களை இரண்டு சப் – டிவிஷன்களாகப் பிரித்து அவற்றை ஆர்டிஓ அல்லது சப் – கலெக்டர் நிர்வாகம் செய்வார். இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களிலோ, வருவாய் கோட்டங்களில் இவர்களுக்கான அலுவலகம் இருக்கும். அன்றைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் எனக்கு தெரிந்தவரை தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசியில் மட்டும் இந்த கோட்ட அலுவலகங்கள் இருந்ததாக நினைவு. அந்த சமயத்தில் 3 ஆர்டிஓக்கள் பணியில் இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.
அன்றைக்கு ராமநாதபுரம் மாவட்ட எல்லை மேற்குத் தொடர்ச்சி மலை அதாவது ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கில் இருந்து கிழக்கே கீழக்கரை, வங்கக்கடல், ராமேசுவரம் வரை இருந்தது. இதன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மதுரையில் செயல்பட்டது. மதுரை மாவட்டத்துக்கும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் ஒரே வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் இருந்தன. இவ்வாறாக கிராம, நகரங்களின் நிர்வாகங்கள் இருந்தன.
அன்றைக்கு மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டம். இன்றைக்கு இருப்பதுபோன்ற மது, புகைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இல்லை. கிராம மக்களிடம் பரவலாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது.
சிகரெட்டுகளைப் பொறுத்தவரை வில்ஸ், பெர்க்கிளி, சிஸ்சர்ஸ், எலிபென்ட், ஃபாசிங்சோ போன்ற வகைகள் பிரபலம். கிராமங்களில் வில்ஸ் கிடைக்காது. ஃபில்டர் சிகரெட்களும் அதிகமாக இல்லை. குறிப்பாக, ஏழை, பாமர மக்கள் மத்தியில் பீடி புகைப்பதே அதிகமாக இருந்தது. சொக்கலால் பீடி, பூமார்க், கிளி மார்க் போன்ற பிராண்டு பீடிகள் பிரபலமாக இருந்தன.
தற்போது கிராம மக்களும் பீடியைத் தவிர்த்து சிகரெட்டுக்கு மாறிவிட்டார்கள். மூத்த குடிமக்கள் சிலர் சுருட்டு பிடிப்பது உண்டு. பற்ற வைத்த சுருட்டை உதட்டில் கவ்விக் கொண்டு புகைத்தபடி நடந்து செல்வார்கள். பிறரிடம் பேசும்போதும் மேற்கத்திய ஸ்டைலில் சுருட்டை எடுக்காமலேயே பேசுவார்கள். ஒரு சுருட்டை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரைகூட புகைப்பது உண்டு.
வசதியான மேல்தட்டு மக்கள் அன்றைக்கு லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட சுருட்டுகளைப் பயன்படுத்துவார்கள். கலை நுணுக்கமுள்ள சின்ன மரப்பெட்டியில் சுருட்டுகள் அடுக்கப்பட்டு அழகான முறையில் ‘பேக்’ பண்ணப்பட்டு அவை இருக்கும்.
சிலருக்கு காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடித்தால்தான் காலைக் கடன்களை கழிக்க முடியும். அது பழக்கமாகவே மாறியிருந்தது. அதேபோல் சிலருக்கு புகை பிடித்தால்தான் காலைக்கடன்களை கழிக்க முடியும் என்ற நிலையும் இருந்தது.
கர்மவீரர் காமராஜர் ஆட்சி காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக கன்னியாகுமரி லூர்தம்மாள் சைமன் இருந்தார். அப்போது வெளிநாட்டில் இருந்து மீன் குஞ்சுகளை வாங்கி குளங்களில் விட ஏற்பாடு செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு ஒருபுறம் வரவேற்பு இருந்தாலும், மற்றொரு சாரார் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. ஏற்கெனவே குளத்தில் வளரும் அயிரை, கெண்டை போன்ற மீன்கள் இதனால் அழிந்துவிட்டன என்ற பரவலான குற்றச்சாட்டுகளும் அன்றைக்கு எழுந்தன.
திருநெல்வேலி மாவட்டமும் உ.வே.சா.வும்
திருநெல்வேலி மாவட்டத்துக்கும், ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா.வுக்கும் உள்ள தொடர்புகள் அதிகம். தன்னுடைய சுயசரிதையில் பல இடங்களை அவர் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, கரிவலம்வந்தநல்லூர், இளையரசன் நந்தல், குருவிகுளம், கழுகுமலை, சங்கரன்கோவில், தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, அம்பாசமுத்திரம், சிங்கம்பட்டி, நாங்குனேரி, திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகர், திருப்புடைமருதூர், திருக்குறுங்குடி, ஓட்டப்பிடாரம் என்ற பல இடங்களுக்கு ஏடுகளை தேடிச் சென்றதை எல்லாம் சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு பகுதிக்கும் அவர் பிரயாணம் செய்யும்போது அதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி ஜமீன்தார்கள் செய்வார்கள். தங்களது வில்வண்டிகளையும், உ.வே.சா. ஆங்காங்கு தங்கும்போது, சமைத்து சாப்பிட அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை எல்லாம் கொடுத்து அனுப்புவதுண்டு. ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா.வையும் நெல்லையையும் பிரிக்க முடியாது
திருநெல்வேலியில் அன்று பல்வேறு பதிப்பகங்கள் பிரபலமாக இருந்தன. குறிப்பாக, சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம், திருநெல்வேலி டவுன் கிழக்கு ரத வீதியில் செயல்பட்டு வந்தது. உலகத் தமிழ் மக்களிடம் இந்த பதிப்பகம் மிகவும் புகழ்பெற்று விளங்கியது. அதேபோல், எஸ்.ஆர்.சுப்பிரமணியம் பிள்ளை, ஆறுமுகம் பிள்ளை என பல பதிப்பகங்களும் நெல்லையில் செயல்பட்டன.
மதுரையில், புது மண்டபத்தில் நடன சுந்தர பிரதர்ஸ், பழனியாண்டி சேர்வை போன்ற புத்தகக் கடைகளும் முக்கியமானவை. மினர்வா நோட்ஸ், கோனார் தமிழ் உரை, பாப்புலர் கைடுகள் போன்றவை மாணவர்களுக்கு அன்றைக்கு துணைப் புத்தகங்களாக விளங்கின.
பியூசி அல்லது பட்டப்படிப்பு வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ‘நான் டீடெயில்’ பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இந்த ‘நான் டீடெயில்’ பாடங்களில் ஆங்கில புதினங்கள், தமிழில் பிரபலமான நா.பார்த்தசாரதி படைப்புகள், தி.ஜானகிராமனுடைய ‘அக்பர் சாஸ்திரி’ என்ற சிறுகதையின் தொகுப்புகள் இடம்பிடித்திருந்தன. பிரீ யூனிவர்சிட்டி கிளாஸ், அதாவது கல்லூரி புகு முக வகுப்பில் (பியூசி) ‘நான் டீடெயில்’ பாடத்தில் எம்.கே.காந்தி இடம்பெற்றிருந்தார். இந்த இடத்தில் ஒரு அரசியல் விஷயத்தை சொல்ல வேண்டும்.
கல்விமுறை
மூதறிஞர் ராஜாஜி ஒருகாலத்தில் இந்தியை ஆதரித்தார்; பின் எதிர்த்தார். ராஜாஜி, ம.பொ.சி போன்ற தலைவர்கள் இல்லையென்றால் நமக்கு சென்னை மாநகரமே கிடைத்திருக்காது. அதே ராஜாஜிதான் பள்ளியில் தொழிற் கல்வியைக் கொண்டு வந்தார். அது குலக்கல்வி அல்ல.
நேரு காலத்தில் ஒரு கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. பள்ளி மாணவப் பருவத்திலேயே தொழிற் கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதை வரையறுப்பதற்காக கல்வி அறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஆலோசித்து கொடுத்த அறிக்கையின்படி இந்த தொழிற் கல்வி கொண்டுவரப்பட்டது.
அந்த கொள்கையின்படி, நெசவு, விவசாயம், தச்சு, பொறியியல் போன்ற தொழிற் கல்வி பாடங்களைக் கற்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார் ராஜாஜி. இத்தகைய தொழிற் கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்ளும்படி கூறினாரே தவிர, ‘குலக்கல்வி’ கற்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. ‘குலக்கல்வி’ என்ற வார்த்தையே அவர் வாயில் இருந்து வரவில்லை.
ஆனால் அன்றைக்கு எதிர்க்கட்சியினர், ராஜாஜியைக் ‘குல்லுகப் பட்டர்’ என்றும், குலக்கல்வியை கொண்டு வருகிறார் என்று விமர்சித்து வந்தனர்; மக்களிடையே பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். இவ்வாறெல்லாம் விமர்சித்த அதே திமுகதான் பின்னாளில், 1967-க்குப் பிறகு இந்திரா காந்தி காலத்தில் தொழிற் கல்வியுடன் இணைந்த புதிய கல்விக் கொள்கையை, தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது ஆதரித்தது. உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பிலும், எஸ்எஸ்எல்சியிலும், இந்த தொழிற் கல்வி கற்பிக்கப்பட்டது. பாடப் புத்தகங்களை திமுக அரசு அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அந்த நேரத்தில், நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது நெசவு, இன்ஜினீயரிங் , விவசாயம் வேளாண்மை, தோட்டக்கலை, மருத்துவம் சார்ந்த சின்ன சின்ன படிப்புகள் என்று வந்துவிட்டன. இதை ‘எலெக்டிவ் சப்ஜெக்ட்’ அல்லது விருப்பப் பாடம் என்பார்கள். இது கிட்டத்தட்ட அடுத்த கல்விக் கொள்கை 1972-ல் வரும்வரை தமிழகப் பள்ளிகள் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த கல்வி முறை இருந்தது. ராஜாஜி சொன்னபோது மறுதலித்தவர்கள் பின்னாளில் அதே கல்வியை செயல்படுத்தினார்கள். உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்படும்தானே!
எங்கள் மாவட்டத்தில் நெசவாளர்கள் அதிகம். குறிப்பாக சங்கரன்கோவில், மேலப்பாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நெசவாளர்கள் அதிகமாக இருந்தார்கள். தளவாய்புரம், அருப்புக்கோட்டை சுங்குடிச் சேலைகள், சின்னாளம்பட்டு சேலைகள் அன்றைக்கு மிகவும் பிரபலமாக இருந்தன. விதவிதமான புடவைகள் அடங்கிய பொட்டணத்தை சைக்கிளிலோ, தலையிலோ சுமந்தபடி கிராமங்களின் தெருக்களில் நெசவாளர்கள் விற்பனை செய்வார்கள். யாராவது ஒருவர் வீட்டுத் திண்ணைகளில் பொட்டணத்தை பிரித்து சேலைகளை விரித்துப் போட்டிருப்பார் அந்த வியாபாரி. அவரைச் சுற்றிலும் பெண்கள் கூட்டம் கூடியிருக்கும். வார, மாதத் தவணைகளில் புடவைகளை பெண்கள் வாங்குவார்கள்.
எங்கள் பகுதியில் உள்ள பிரபலமான கோயில்களைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். சில கோயில்கள் அதில் விடுபட்டுள்ளன. குறிப்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர் – மதுரை சாலையில் உள்ள கோபால்சாமி மலை கோயில். இது கிருஷ்ணன் கோயில் பக்கத்தில் உள்ளது. அதேபோல் தென்காசி, பண்பொழி அருகில் உள்ள திருமலைக்கோயில், இலஞ்சி முருகன் கோயில், புளியரை தெட்சிணாமூர்த்தி கோயில், கரிவலம் வந்தநல்லூர் சிவன் கோயில் பிரசித்தி பெற்றவை. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில் ஓவியங்கள் கலைநுணுக்கத்துடன் வரையப்பட்டிருக்கும். அந்தக் கோயிலுக்கு டாட்டா, பிர்லா போன்ற பெரு நிறுவனங்கள் அளித்த உதவியால், மறைந்த நீதிபதி ரத்னவேல் பாண்டியன் அண்ணாச்சி தலைமையில், அந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது.
நெல், கரும்பு, மிளகாய் வற்றல், பருத்தி சாகுபடியில் பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும். 1974 காலகட்டத்தில், 60 கிலோ கொண்ட 3 நெல் மூட்டைகளை விற்றால், ஒரு பவுன் தங்கம் வாங்கி விடலாம். சிமென்ட் மூட்டை விலை 10 ரூபாய்தான். இன்றைக்கு நெல் விலை ஓரளவு உயர்ந்திருந்தாலும், அதனுடன் ஒப்பிட முடியாத வகையில், சிமென்ட், தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
செந்நெல், வெண்நெல், மூங்கில் நெல், என்று பண்டைய காலத்தில் நெல் வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த பாரம்பரிய நெல் வகைகளைப் பற்றி எட்டையபுரம் பள்ளுவில் பாடப்பட்டுள்ளது.
தற்போது, நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500 என தமிழக அரசு விலை அறிவித்தும் அது சரியாக நடைமுறைக்கு வரவில்லை. அதேநேரம், நெல் கொள்முதலில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன, விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்லை பாதுகாக்க போதிய கிடங்கு வசதி இல்லாமல், திறந்தவெளியில் மூட்டைகளை போட்டு வைத்துள்ளனர். மழையிலும், வெயிலிலும் நெல் மூட்டைகள் பாழாகி வரும் காட்சியைப் பார்க்கும்போது மனம் மிகவும் வருந்துகிறது…