Site icon Metro People

கொளத்தூர் மணி, மணியரசன் மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் பேசியதாக கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஈரோடு மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முறையான விசாரணை நடத்தப்படாமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாட்சிகளுடைய வாக்குமூலங்களில் போதிய முகாந்திரம் இல்லை. எனவே குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கொளத்தூர் மணி, மணியரசன் ஆகிய இருவர் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version