ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கியுள்ள படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில், வரும் 4-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் ஆராத்யா தேவி நாயகியாக நடித்துள்ளார். கல்பலதா, சத்யா யாது உட்பட பலர் நடித்து உள்ளனர்.
படம் பற்றி ராம் கோபால் வர்மா கூறும்போது, “ஒவ்வொரு படத்துக்கும் ஒரு மையக்கரு உள்ளது. இந்தப் படத்தின் விஷயம், சோஷியல் மீடியாவின் தாக்கம், உறவுகளை எப்படி பாதிக்கிறது என்பதுதான்.
சில நேரங்களில் கெட்ட விஷயங்கள் நடந்து அது மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப் பட்டிருக்கலாம். அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது” என்றார்.
ஆராத்யா தேவி கூறும்போது, “நான் ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் இருட்டுப் பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.