புதுடெல்லி: 26 ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்துவற்காக 45 மிக்-29கே ரக போர் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கப்பட்டவை. ஆனால், இந்த விமானங்களுக்கான சர்வீஸில் கடந்த சில ஆண்டுகளாக பல பிரச்சினைகள் எழுந்தன. கடற்படை பயன்பாட்டுக்கான போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுக்கு மேல் ஆகும்.
அதனால் பிரான்ஸிடமிருந்து 26, ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்க கடற்படை முடிவு செய்தது. இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்தாண்டு செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. இந்த விமானங்களை பிரான்ஸிடமிருந்து ரூ.64,000 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு 37 முதல் 65 மாதங்களுக்குள் 26 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும். 2030-31-ம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் வழங்கப்படும்.
விமானப்படை பயன்பாட்டுக்காக பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின் தற்போது 26 ரஃபேல்-எம் ரக போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. இதுதவிர பிரான்ஸிடமிருந்து ரூ.33,500 கோடியில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் வாங்கும் ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டு வருகிறது.