திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 76 நாட்களுக்குப் பிறகு
மீண்டும் மின் உற்பத்தி நேற்று தொடங்கியது.
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகளில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்குப் பயன்படுத்திய யுரேனியம் எரிகோல்களை குறிப்பிட்ட காலஇடைவெளியில் அகற்றிவிட்டு, புதிதாக எரிகோல்கள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, 2-வது அணு உலையில் கடந்த 76 நாட்களுக்கு முன் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, எரிகோல்கள் மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து புதிய எரிகோல்கள் நிரப்பப்பட்டதுடன், பராமரிப்புப் பணிகளும் நடைபெற்றன.
இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று பிற்பகல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. ஓரிரு நாட்களில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.