சென்னை: “ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நாளை (ஏப்.9) அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, திமுக அரசு அழைத்துள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் – திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது, குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுக-வின் காந்திசெல்வன் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்த போது, 21.12.2010-ல் நீட் தேர்வு குறித்து மத்திய அரசிதழில் அறிவிக்கை செய்தது. 2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு தற்காலிகமாக விலக்கு பெற்றார்கள். உச்சநீதிமன்றம் 9.5.2016-ஆம் தேதியிட்ட தீர்ப்பில், நீட் தேர்வின் மூலம்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறியது.
எனவே, அதிமுக அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 31.1.2017 அன்று தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கவில்லை. திமுக-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி, மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் நீட் தேர்வு தொடர வேண்டும் என்று வாதாடியதுடன், ‘எந்தச் சூழ்நிலையிலும், இனி யாராலும் இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது’ என்று பேட்டி அளித்தார்.
உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று பரவிய காரணத்தினால் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையினை கொண்டு வரும் வகையில் ஒரு அவசர சட்டத்தினை உருவாக்கித் தரவேண்டி, மத்திய அரசுக்கு எனது தலைமையிலான அதிமுக அரசு 8.7.2020 அன்று கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், 2019-ல் மருத்துவம் பயில நீட் நுழைவுத் தேர்வின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 6 பேர் மட்டுமே தேர்வாயினர். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், நான் முதல்வராக இருந்தபொழுது மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கி, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம், இன்றுவரை 3500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் பயின்று வருகின்றார்கள் என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன். 2021-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தமிழக மக்களுக்கு நீட் குறித்து பொய் வாக்குறுதி அளித்து, அதாவது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று மேடைதோறும் பேசினார்கள்.
அதை நம்பி மாணவர்களும், இளைஞர்களும், பெற்றோர்களும் திமுக-விற்கு வாக்களித்தனர். ஆனால், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக அரசு மேற்கொண்டது போன்று நீட் நுழைவுத் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 3.9.2021, 8.2.2022 என்று இருமுறை சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏப்.4ம் தேதி அன்று சட்டமன்றத்தில் பொம்மை முதல்வர் ஸ்டாலின், பேரவை விதி – 110ன்கீழ் பேசும்போது, குடியரசுத் தலைவர் தமிழ் நாட்டின் நீட் தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், எனவே, 9.4.2025 அன்று அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையில் 10.1.2025 அன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில், நீட் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மத்திய அரசு நீட் தேர்வை அறிவித்திருந்தாலும்கூட, அதை 2016-17 வரை விலக்கு பெற்றோம். ஆனால், நீட் நுழைவுத் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து அதன்படிதான் நீட் தேர்வு நடைபெறுகிறது.
நீங்கள் எப்படி நீதிமன்றத்தை சுட்டிக்காட்டுகிறீர்களோ, அதேபோன்றுதான் நாங்களும் அப்போது நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததை சுட்டிக் காட்டினோம். ஆனால், ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, தேர்தலின்போது பொய்யான தகவலை மாணவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் பரப்பி, திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு செய்தீர்களா? இல்லையா? என்றும் அந்தக் கேள்வியைத்தான் மக்கள் தொடர்ந்து கேட்கிறார்கள் என்றும் பேசினேன்.
பொம்மை முதல்வர் ஸ்டாலின் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்று சொல்லியிருக்கிறோமே தவிர, எங்களால் எப்படி ரத்து செய்ய முடியும்? சராசரி மனிதனாக இருக்கக்கூடிய அனைவருக்குமே இது தெரியும். தமிழக அரசால் இதை ரத்து செய்ய முடியாது என்றும், மத்திய அரசுதான் இதை ரத்து செய்ய முடியும் என்றும், அதனால்தான் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்’ என்று சட்டப் பேரவையில் எனக்கு பதில் அளித்தார்.
‘நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும், மாநில அரசு அல்ல, அந்த உரிமை மாநில அரசிற்கு இல்லை என்பதை ஸ்டாலினே ஒத்துக்கொண்டுள்ளார்’ என்று சட்டப் பேரவையில் பேசினேன். மேலும், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நீட் குறித்த வழக்கு நிலுவையில் இருந்தது தெரிந்திருந்தும் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் அதை மறைத்து, வாக்குகள் பெறுவதற்காக பொய்யாக தேர்தல் பரப்புரை செய்தார்கள்.
எனவேதான், நான் ‘தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகின்ற கட்சி எது என்று நாட்டு மக்கள் அறிந்து கொண்டார்கள்’ என்று 10.1.2025 அன்று சட்டப் பேரவையில் பேசினேன். திமுக-வின் இரட்டை வேடத்தால் ஏப்.4 வரை, நீட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாது என்ற மன வருத்தத்தில் இதுவரை சுமார் 20 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர். 2021-ல் ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, தமிழகத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால், உடனடியாகக் குழு அமைப்பது; அறிக்கை விடுவது; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது; சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது, மக்களைக் குழப்பி திமுக ஸ்டாலின் மாடல் அரசு, செய்த தவறுகளை மக்களிடம் மறக்கச் செய்யும் நாடகம்.
நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்கு, திமுக-வின் பொம்மை முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும். குடியரசுத் தலைவர் நீட் தொடர்பான தமிழ்நாட்டின் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும்; நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், சட்டமன்றத்தில் பொம்மை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இதில் என்ன முடிவு எடுக்க முடியும்?
பொம்மை முதல்வர் ஸ்டாலின் 6.4.2025 அன்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, நீட் குறித்த தனது பொய் முகமூடி தமிழக மக்களிடம் வெளிவந்துவிட்டதை மறைக்கும் விதமாக, நீட் நுழைவுத் தேர்வு விலக்கை வழங்கினால்தான் அதிமுக, பாஜக-வுடன் கூட்டணி அமைப்போம் என்று ‘கண்டிஷன்’ விதிக்கச் சொல்கிறார். நான் கேட்கிறேன், ஸ்டாலின் 2019, 2021, 2024 தேர்தல்களில் காவிரியில் கர்நாடக உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது, இதற்கு ஒத்துக்கொண்டால்தான் தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி என்று ‘கண்டிஷன்’ போட்டாரா?
உச்ச நீதிமன்ற ஆணைப்படி முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்திய பிறகு, 142 அடியிலிருந்து 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க சம்மதித்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி என்று ‘கண்டிஷன்’ போட்டாரா? நீட் விஷயத்தில் தாம் முழுமையாக தோற்றுவிட்டோம், இனி தமிழக மக்களிடம் தனது பொய் நாடகம் எடுபடாது என்பதை உணர்ந்த பொம்மை முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் எதை பேசுகின்றோம் என்பது தெரியாமல் பிதற்றியுள்ளார்.
2026-ல் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், நான்கு ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக நாளை (ஏப்.9) அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, அதிமுக, திமுக-வின் ஸ்டாலின் மாடல் திமுக அரசு அழைத்துள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.