Site icon Metro People

வாசிப்பு நமது சுவாசிப்பாகட்டும்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வாசிப்பு நமது சுவாசிப்பாகட்டும் என்று தேசிய நூலகர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் (சீயாழி ராமாமிர்த ரங்கநாதன்) பிறந்த நாள் இன்று (ஆகஸ்ட் 12) கொண்டாடப்படுகிறது.

1924-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகராக ஆனவர் எஸ்.ஆர்.ரங்கநாதன். அடுத்த 20 ஆண்டுகளுக்கு, ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியவர்.

நூலக அறிவியலில் மேலும் சில விஷயங்களை அறிந்துகொள்வதற்காக, லண்டனுக்குச் சென்றார் ரங்கநாதன். அங்கு நூலகங்கள் துறை வாரியாக, அறிவியல்பூர்வமாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன. அதன் விளைவே ‘கோலன் கிளாஸிஃபிகேஷன்’ எனும் அவருடைய நூல் பகுப்பாக்க முறை உருவானது. புத்தகங்களைத் துறை வாரியாகப் பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளை ஏற்படுத்தி, அவற்றுக்குத் தனித்தனி எண்கள் ஒதுக்கி, அவற்றை அலமாரிகளில் முறையாக அடுக்கிவைத்து, அவற்றை வகைமைப்படுத்தி, பட்டியலிடுவதுதான் இந்த முறை.

இதனால், குறிப்பிட்ட ஒரு புத்தகத்தைத் தேடிவரும் ஒருவர், மிகக் குறைந்த நேரத்தில், மிகக் குறைந்த தேடலில் அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம்.

லண்டனில் நூலக அறிவியல் பயிற்சி முடித்துத் திரும்பியவுடன், ‘சென்னை நூலகச் சங்கம்’ ஒன்றை ஏற்படுத்தி மாட்டு வண்டிகளில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, கிராமங்களை நோக்கிச் சென்றார். நாட்டின் முதல் நடமாடும் நூலகம் அப்படித்தான் மன்னார்குடியில் தோன்றியது. நூலக அறிவியலுக்காக உழைத்த இவரது பிறந்த நாள் (ஆகஸ்ட் 12) தேசிய நூலகர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் நூலகர் தினம் குறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தேசிய நூலகர் நாள் இன்று! புத்துலகக் கனவுக்கு வழிகாட்டுபவை புத்தகங்களே! அதனால்தான் முத்தமிழறிஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார்!

பொன்னாடைகள், பூங்கொத்துகள் தவிர்த்துப் புத்தகங்களை வழங்குமாறு நான் கேட்டுக்கொண்டதும் அவர்வழியில்தான். வாசிப்பு நமது சுவாசிப்பாகட்டும்!” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version