இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 11 பேரை நேற்று நிபந்தனையின்றி விடுதலை செய்து உத்தரவிட்டது.
கடந்த மார்ச் 27-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜெர்ஜிஸ் அந்தோணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி ஜெர்ஜிஸ் அந்தோணி, இன்னாசி, பாலமுருகன், சவேரியார் அடிமை, ஆர்னால்ட், பாக்கியராஜ், ரஞ்சித், எபிராஜ், அந்தோணி சீசரியன், முத்துகளஞ்ஜியம், கிறிஸ்துராஜா ஆகிய 11 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த மீனவர்கள் மீதா வழக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர். அதன்படி, ஊர்க்காவல் துறை நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்கள் 11 பேரையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.