வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது என்பது தமிழகத்து அரசியல்வாதிகள் அவ்வப்போது பயன்படுத்தும் வார்த்தைப் பிரகடனம். கோவை மாவட்டத்து மக்களும் இதை இப்போது உரக்கச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், மாவட்டத்தின் தெற்குப் பகுதிக்கு அரசின் திட்டங்கள் அவ்வளவாய் வந்து சேராததுதான்.
10 சட்டமன்றத் தொகுதிகள், 2 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை மாவட்டத்தில் திமுக-வுக்கு இப்போது ஒரு எம்எல்ஏ கூட இல்லை. இந்த சரித்திரத்தை மாற்ற மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியை அனுப்பி வைத்திருக்கிறது திமுக தலைமை.
வளர்ச்சித் திட்டங்களில் தொடர்ந்து கோவை புறக்கணிக்கப்படுவதாக அதிமுக-வும் பாஜக-வும் பிரச்சாரம் செய்ததால் கோவைக்கு தனி கவனமெடுத்து திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இந்தத் திட்டங்கள் எல்லாமே கோவையின் பிற பகுதிகளுக்கானதாகத்தான் உள்ளது. கோவை தெற்குப் பகுதி தொடர்ந்து அரசுத் திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்று புகைச்சல் கிளம்பி இருக்கிறது.
இந்தப் பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக ‘கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு’ என்று ஒரு அமைப்பையே உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பின் செயலாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கே.எஸ். மோகன் ஆகியோர் கோவை தெற்கு புறக்கணிப்பு குறித்து நம்மிடம் பேசினார்கள்.
“கோவை மாவட்டத்தில் பரந்து விரிந்து காணப்படும் தெற்குப்பகுதி முக்கியமானதாகும். டவுன்ஹால் உக்கடம், கரும்புக்கடை, குறிச்சி, போத்தனூர், ஈச்சனாரி, சிட்கோ, மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம், குனியமுத்தூர், சுகுணாபுரம், மதுக்கரை, க.க.சாவடி, சூலூர், வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது இது. தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன.
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கோவை தெற்கு, சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளும், கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளும் இதன் எல்லைக்குள் வருகின்றன. இத்தனை இருந்தும் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் வந்துசேராமல் குப்பைக் கிடங்காக மட்டுமே கோவை தெற்கு பகுதி இருக்கிறது.
வெள்ளலூரில் 650 ஏக்கரில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கு மட்டுமே நாங்கள் கண்ட பலனாக இருக்கிறது. இங்குள்ள குப்பையை அகற்றிவிட்டு மாற்றுத் திட்டங்களை கொண்டுவரவும் அரசு யோசிக்கவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலையை மையப்படுத்தி மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால் அதைவிடுத்து, அவிநாசி சாலை, சத்தி சாலைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளலூரில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தையும் பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். விபத்துகளை தடுக்க எல் அண்ட் டி புறவழிச்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் கோரிக்கைக்கும் அரசுகள் செவிசாய்க்கவில்லை. சுந்தராபுரம், போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
மதுக்கரை மரப்பாலத்தை அகலப்படுத்தும் கோரிக்கையும் கவனிக்கப்படவில்லை. போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தி, முக்கிய ரயில் முனையமாக மாற்றினால் இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு முக்கிய ரயில்களை இயக்கலாம். வந்தே பாரத் ரயில்களையும் இங்கிருந்து சில ஊர்களுக்கு இயக்கலாம்.
இதையெல்லாம் யோசிக்க மறுக்கும் அரசு, கோவை தெற்குப் பகுதிக்கு குப்பைக்கிடங்கை மட்டும் தந்துவிட்டு, செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம், ஹாக்கி மைதானம், சர்வதேச கிரிக்கெட் மைதானம், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் உள்ளிட்ட திட்டங்களை கோவையின் மற்ற பகுதிகளில் செயல்படுத்துகிறது” என்று சொன்னார்கள் அவர்கள்.
கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளோ, “ஒட்டுமொத்த கோவையின் வளர்ச்சிக்குமான திட்டங்களுக்கு திமுக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கிறது. மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணி திமுக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளலூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரம்மாண்ட காய்கறிச் சந்தை, பழ மார்க்கெட் அமைத்தல், லாரிப்பேட்டை அமைத்தல் ஆகிய திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” என்கிறார்கள்.
இம்முறை கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் வெல்ல நினைக்கும் திமுக, திட்டங்களை செயல்படுத்துவதில் தெற்கு கோவையை அப்படி எல்லாம் ஒதுக்கிவைத்துவிடாது என நம்புவோம